Home இலங்கை அரசியல் இலங்கை அரசாங்கம் தொடர்பில் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷின் நம்பிக்கை

இலங்கை அரசாங்கம் தொடர்பில் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷின் நம்பிக்கை

0

தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு
நிலவுகின்றது. அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள்
ஆவலாக இருக்கின்றமையை நான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியக்
கூடியதாக இருந்தது என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர்
எரிக் வோல்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே கனேடியத்
தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், தேவைப்பாடுகள்
மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகக் கனேடியத் தூதுவருக்கு வடக்கு
மாகாண ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார்.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை
வர்த்தமானியில் பிரசுரித்த முறைமை தவறானது என்றும், அதனால் ஏற்பட்டுள்ள
சிக்கல்கள் தொடர்பிலும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு கோருகின்றனர்
என்றும், பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளைக் கோரவில்லை என்பதையும்
சுட்டிக்காட்டிய ஆளுநர், இங்கு காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும்போது
தெற்கில் தவறாக சித்தரிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியின் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது தொடர்பாகவும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி, பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பன
தொடர்பிலும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்துக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகள்
இடம்பெற்றால் சிறப்பானது என்று கனேடியத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள், தமது பயணப் பொதிகளை பஸ்களில்
யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டு, கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்று
அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றனர் என்பதையுத் தூதுவர்
குறிப்பிட்டார்.

தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு
நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர், அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது
தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக்
குழுக்களிடமிருந்து அறியக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக, நீங்கள் (நாகலிங்கம் வேதநாயகன்) நியமிக்கப்பட்டமை
தொடர்பில் பல தரப்பட்டவர்களிடமிருந்து சாதகமான செய்திகளைக் கேட்டதாகக்
குறிப்பிட்ட தூதுவர், உங்கள் மீது வடக்கு மக்கள் நிறைய எதிர்பார்ப்புடனும்,
நம்பிக்கையுடனும் இருக்கின்றனர் என்பதையும் தம்மால் அறியமுடிவதாகவும்
தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின்
இணைப்புச் செயலாளர் எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version