இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16ஆவது பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹரினிக்கு பிரதமர் பதவி
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக ஹரினி நாடாளுமன்றத்திற்குள் உள்நுழைந்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டிருந்த ஹரினிக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்று நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஹரினிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறைமையில் உள்ள திறமையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளை செய்து அவை தொடர்பில் குரல் கொடுத்து அரசியலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.