சிறிலங்காவின் அதிபர் தேர்தல் விவகாரம் என்றும் இல்லாதவாறு இம்முறை தெற்கை விட வடக்குக்கிழக்கில் சூடு பிடித்து வருகின்றது.
ஏதோ தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு ரேஞ்சில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது தமிழ் தரப்புக்களால்.
யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் ஆடிய பேயாட்டத்தின் வீச்சு பாரிஸ் வரை எதிரொலித்தது.
இன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரச்சனையே சிறிலங்காவின் அதிபர் தேர்தல்தான் என்பதுபோல ஓடித்திரிகின்றார்கள் தமிழ் அரசியல்வாதிகளும், சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும்.
தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று ஒருசாராரும், பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று மற்றொரு சாராரும், பொதுவேட்பாளர் கூடவே கூடாது என்று சுமந்திரன் வகையறாக்களும் பகிரங்கமான நிலைப்பாடு எடுத்துக்கொண்டிருக்க, சஜித்துக்கும், ரணிலுக்கும், அனுரவுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை சில தமிழ் அரசியல்வாதிகள் இரகசியமான வெளிப்படுத்தி வருவதையும் களத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆக, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத சிறிலங்காவின் அதிபர் தேர்தலை, தமிழ் மக்களின் தலையாய பிரச்சனையாக மாற்றியதில் வெற்றிகண்டிருக்கின்றார்கள் தமிழ் அரசியல்வாதிகளும், சிவில் சமூக அமைப்புக்களும்.
தமிழ் தலைமைகளின் அதிபர் தேர்தலை மையப்படுத்திய களோபரங்கள் எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அதிபர் தேர்தலே நடைபெறாதுபோல இருக்கின்றது என்று ஒரு குண்டைத் துக்கிப் போட்டுள்ளார் ஒரு அரச உயரதிகாரி.
நேற்று நடைபெற்ற ஆளுனர்களுக்கான சந்திப்பின் போது, அங்கு பேசிய ரணில் விக்ரமசிங்க தேர்தல் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதுடன், தேர்தல் தொடர்பான எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடந்துகொண்டாராம்.
ரணிலின் உடல்மொழியை அடிப்படையாகவைத்துப் பார்க்கின்றபோது, அதிபர் தேர்தல் உடனடியாக நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை என்று தான் நடபுவதாகக் கூறினார் அந்த அரசாங்க உயரதிகாரி.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கின்தோ இல்லையோ, இந்த விடயத்தில் உருவேறி ஆடிக்கொண்டிருக்கின்ற தமிழ் தலைமைகள், தேர்தல் பிற்போடப்பட்டதும் கடைகளை மூடிவிட்டுச் சென்றுவிடாமல், இதே உற்சாகத்தை தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்துகின்ற விடயத்திற்குத் திருப்பினால் திருவாளர் பொதுஜனம் சந்தோஷப்படும்.
உங்களுக்கும் புண்ணியமாப் போகும்…