Home இலங்கை அரசியல் கண்டி மாவட்ட துரோகிக்கு தக்க பாடம் புகட்டுவோம் : திகாம்பரம் சூளுரை

கண்டி மாவட்ட துரோகிக்கு தக்க பாடம் புகட்டுவோம் : திகாம்பரம் சூளுரை

0

கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு
பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான நாடாளுமன்ற
உறுப்பினருமான பழனி திகாம்பரம்(Palany Thigambaram) தெரிவித்துள்ளார். 

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான
அமைப்பாளர்களை கினிகத்தேனையில் வைத்து இன்று (17) சந்தித்து கலந்துரையாடிய
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு யார் துரோகம் செய்தாலும் அதனை மக்கள் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகின்ற தேர்தல்களில் துரோகம் செய்தவர்களுக்கு
மக்கள் தகுந்த பாடத்தை காட்டுவார்கள்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இருக்கின்ற
எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்காளர்கள் எந்தவகையிலும் தமது மனதிடத்தை
இழக்காமல் தொடர்ந்தும் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

அதற்கு நான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியுடைய தலைவர்கள் உறுதுணையாக
இருப்போம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாச
அவர்களுக்கு வாக்களிக்க தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆகவே, கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி
தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஆரம்ப
கட்டமாகவே அமைப்பாளர்களாகிய உங்களை சந்தித்து இருக்கின்றேன். அடுத்த கட்ட
நடவடிக்கைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட இருக்கின்றோம்.

எதிர்வரும் புதிய அரசாங்கத்தில் நாங்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு
கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி உட்பட எல்லா பிரதேசத்திலும் இடை
நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தயாரான
நிலையில் இருக்கின்றோம்.

எனவே, எமக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த
பாடத்தை புகட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version