சஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும்
ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடமாளுமன்ற
உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் இன்று (17) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலோடு இணைந்தவர்களுக்கு பணம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் இனவாதத்தையும் சாதியவாதத்தையும் விதைத்து முன்னாள் ஜனாதிபதிகள்
ஆட்சியில் இருந்தனர், 40 வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவே இந்த
நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு
இட்டுச் செல்லும் ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர்.
இன்று ரணிலுக்கு ஆதரவாக இணைவோருக்கு மதுபான விற்பனை உரிமம் மற்றும் பணம்
வழங்கப்படுகின்றது. அத்துடன், ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்தின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபா.
ஜனாதிபதியைச் சுற்றி திரண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு
உள்ளாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தின் ஆட்சி
மேலும், சஜித் பிரேமதாச இந்த நாட்டில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து
வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்யவுள்ளதாக இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவைச் சுற்றி திரண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டின்
எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக ஒன்றுபட்டுள்ளதாகவும், அந்தக்
குழுவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட மக்கள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க தயாராக
உள்ளதாகவும், அந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது எனவும் இதன்போது இராதாகிருஷ்ணன் மேலும் சுட்டிக்காட்டினார்.