பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் துன்பப்படும் போது தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரணிலுக்கு கிடைத்த பரிசு
மேலும், பொருாளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, மக்கள் வாழ்வதற்கு வழி செய்தமைக்காக என்னை கௌரவப்படுத்தி கிளிநொச்சியில் உள் ளபெண் ஒருவர் எனக்கு இந்த தொப்பியை பரிசாகக் கொடுத்தார் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் வரிசைகளில் தவிக்கும் போது அதனை கண்டுகொள்ளாத சஜித் மற்றும் அநுரவிடம் தமது எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை.
கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த மக்களுக்கு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலம் உள்ளது என்பதை வலியுறுத்துகின்றேன்.
நான் அணிந்துள்ள தொப்பி தொடர்பில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். கிளிநொச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு இறங்கி வரும் பெண் ஒருவர் இந்தத் தொப்பியை எனக்கு வழங்கினார்.
நான் உணவு, உரம், எரிபொருள் வழங்கி, மக்கள் வாழ வழிசெய்தமைக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தி இந்தத் தொப்பியை தந்தார். நன்றிக் கடன் செலுத்துவதற்காக எனக்கு வாக்களிப்பதாக அவர் சொன்னார்.
மக்கள் கஷ்டப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. மற்றவர்கள் பொறுப்பேற்காத நிலையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்றேன்.
ஆனால் மக்கள் பட்டினியில் இருக்கையில் தேர்தல் நடத்துமாறு எதிரணியினர் கோரினர். கேஸ், பெட்ரோல் இன்றி மக்கள் கஷ்டப்படும்போது, உள்ளூராட்சி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தினால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
மக்கள் கஷ்டப்படும்போது, நாம் இணைந்து செயற்படுவது தவறா? ஆனால் அவர்களின் கட்சியை உடைப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாம் யாரைப் பாதுகாத்தோம். ராஜபக்சவினரை நாம் பாதுகாக்கவில்லை. மக்களைத்தான் பாதுகாத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.