புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும்.
பணம் அச்சிடல்
வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது.
இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை.
நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள்
இதேவேளை, புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, (Anura Kumara Dissanayake ) நிதியமைச்சராக கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள் வெளியிடப்படவில்லை.
எனவே ஒரு பில்லியன் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி போலியானது என தெரிவித்துள்ளார்.