உள்ளூராட்சி தேர்தல் பின்னடைவை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்தது.
எனினும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை தீர்க்காது, அவ்வாறான மாற்றத்திற்கு செல்வது பயனற்றதாக கருதும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்தள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சரவை மாற்றம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது.
இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன.
இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்ளக மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
பிரதமர் பதவி
இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
எவ்வாறாயினும், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்ள முரண்பாடுகளை மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
