Home இலங்கை அரசியல் தமிழ் – முஸ்லிம் விரிசல்களை ஏற்படுத்த இலங்கையில் நடக்கும் சதி! அருட்தந்தை சீற்றம்..

தமிழ் – முஸ்லிம் விரிசல்களை ஏற்படுத்த இலங்கையில் நடக்கும் சதி! அருட்தந்தை சீற்றம்..

0

 இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை
பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக
நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று(17.08.2025) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும்,

கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு
ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு
எதிராகவும் நேற்றுமுன்தினம் (15.08.2025) பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரளை மயான சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில்   எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது.

இலங்கையில் நடந்த பெரிய இன அழிப்பு… 

இப்போராட்டம்
இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக்
கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து
வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைக்குரியதே.

இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை
முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை
அமைப்பை பாசிசவாத அமைப்பு என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை பாசிச வாதி எனவும் மேடை
கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்ததோடு மேடை ஏறி வீர வசனம்
பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட
தேசிய கீதத்தோடு ஆரம்பமானது.

இலங்கையில் இன அழிப்பு, இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும்
தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த
பெரும் தேசியவாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது.

பேரினவாதம் நிகழ்த்திய
இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம
புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பாதையில்
பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன
மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது
முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை.

போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை
தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர். இது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத
மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும்
இனப்படுகொலையாளர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை.

அது
மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல்
அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம்.

சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும்,
இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம்.

இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு
கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம்
உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி
நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை
சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை
மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர்.

தொடர்ந்து
தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின்
போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம்
பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும்.

இத்தகைய அரசியலை
மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ் – முஸ்லிம் உறவை
பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களை பெரும்
சக்திகளாக கொண்டுவர வேண்டும்.

அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும்,
இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ் – முஸ்லிம் இன விரிசல்களையே
ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்கு முழுமையான
ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை
தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும்.

புதிய அரசியல் உறவை பலப்படுத்தி
இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல்
தேவையுமாகும்  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version