அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையின்போது, பணத்திற்கு பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாக பௌத்த பிக்குகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்காவில் வசித்து வரும் 32 வயதான மஹாயயே வினீத என்ற இலங்கை பௌத்த பிக்கு ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னதாக மனிதக் கடத்தல் மற்றும் விபச்சாரத்தை ஒடுக்குவதற்காக பாஸ்டன் காவல்துறையினரால் தொடங்கப்பட்ட “ஒபரேஷன் ரெட் கார்டு” என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் சனிக்கிழமையன்று ரெவெர் ஹோட்டலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
வணிக ரீதியான பாலியல் சேவைகளுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை விளம்பரப்படுத்தும் நெட்வொர்க்குகளைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட மஹாயயே வினீத பிக்கு உட்பட ஏழு சந்தேக நபர்கள் மீதும் பணத்திற்காக பாலியல் சேவைகளை நாடிய குற்றச்சாட்டின் கீழ் பாஸ்டன் மத்திய பெருநகர நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்த இந்த இலங்கை பிக்கு, இச்சம்பவத்தைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
காட்டில் தியானம்
கடந்த 2024 டிசம்பரில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், அங்குள்ள பௌத்த தியான சங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்து தியான நிகழ்ச்சிகளையும் ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் நடத்தி வந்துள்ளார்.
இலங்கையில் பிறந்து தனது 10-வது வயதிலேயே துறவறம் பூண்ட இவர், கடந்த 2022 மே மாதத்தில் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் இறையியல் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், இவர் சுமார் இரண்டரை ஆண்டுகள் காட்டில் உள்ள ஒரு குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எவரும் இதுவரை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை என்றும், இதற்கான நீதிமன்ற விசாரணை எதிர்காலத்தில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/sri-lankan-buddhist-monk-living-in-the-us-arrested-1781764544
