வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹேஷ்காலி பகுதியின் கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவில் உள்ள சோனார்சார் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஃபைபர் கிளாஸ் படகில் இருந்து இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொஹேஷ்காலி கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியை வழிநடத்திய படகின் தலைவர் ஜியாவுர் ரஹ்மான் கூறுகையில், அவர்கள் தங்களைத் தந்தை மற்றும் மகன் என அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போய்க் கடலில் தத்தளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
உயிர் வாழ்ந்த விதம்
உணவு மற்றும் நன்னீர் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், மீன்களை பச்சையாக பிடித்துச் சாப்பிட்டே இத்தனை நாட்களும் உயிர் பிழைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் இலங்கையின் தேவினுவர பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 30 வயதுடைய தந்தை – மகன் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அவர்கள் கடலில் தத்தளித்த விதம் மற்றும் அவர்களின் தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதுடன், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பங்களாதேஷ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/sri-lankan-fishermen-rescued-off-bangladesh-1784982656
