அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக கையெழுத்திடுவதற்கு இலங்கை இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும், இந்த விடயத்தில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இதுவரை 17 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று(17.11) கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை வரிகளை 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்தது என்றும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 13 அன்று வெளியிட்ட உத்தரவில், இலங்கையால் ஏற்றுமதி செய்யப்பட்ட சில உணவுப் பொருட்களை வரிகளிலிருந்து பூஜ்ஜியமாகக் கொண்டு வந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய இராஜதந்திர உறவுகள்
இதேவேளை, இலங்கை ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை சில நாடுகளுடன் புதிய இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியுள்ளது என்றும், வலுவான உறவுகளை உறுதி செய்வதற்காக வேறு சில நாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன னஎவும் அமைச்சர் விஜித கூறியுள்ளார்.
இதேவேளை, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களில் உள்ள நாடுகளுடன் இலங்கை பலவீனமான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் ஆன்டிகுவா, பார்புடா மற்றும் பெலிஸ் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை புதிய இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வாய்ப்புகள்
மேலும், கடந்த ஆண்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் மட்டத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 தெற்காசிய நாடுகள், 19 கிழக்காசிய நாடுகள், 15 ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள், நான்கு மத்திய கிழக்கு நாடுகள், நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் நான்கு கரீபியன் பிராந்திய நாடுகளுடன் 70க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக 150 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வெளியுறவு அமைச்சு வசதிகளை வழங்க முடிந்தது என்றும், இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சுமார் 2,000 நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
