வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று ரஷ்ய (Russia) இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் நிலை குறித்து சரியான பதிலைத் தருமாறு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வின் போது வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் (Vijitha Herath) இந்த வினாவை முன்வைத்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், “தமது குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு கருதிய வேலைவாய்ப்பின் பொருட்டு இலங்கைப் பிரஞைகளான இளைஞர்கள் சிலர் சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் வெளிநாடுகளுக்கு செல்ல முற்படும் போது வெளிநாட்டு முகவர்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றன.
இத்தகைய முகவர்களை நம்பி பெருந்தொகை பணச் செலவில் வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ், சிங்கள இளைஞர்களில் பலர் அத்தகைய முகவர்களால் ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதால் தம்முடன் தொடர்பற்று இருப்பதாகவும் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் காணாமல் போயுள்ள நிலையில் ரஷ்ய எல்லை ஜெலாரஸில் 2022 இல் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட எத்தனை இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர், இவர்களில் யாராவது இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதெனில் அவர்களுடைய விபரங்கள் இரு நாட்டுத் தொடர்பாடல் மூலம் குறித்த இளைஞர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து அரசின் நடவடிக்கையை தெரியப்படுத்த முடியுமா.” என
இதேவேளை இந்த விவகாரம் குறித்து தாங்கள் இராஜதந்திர ரீதியாக அணுகி வருவதாகவும், புள்ளிவிபரவியல் அடிப்படையில் பதில்களை வழங்குவதற்கு ஒரு வார காலத்தை தந்துதவுமாறு விடயத்திற்கு பொறுப்பான பிரதியமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/jgLKSGIfCxY