Home இலங்கை அரசியல் ஈ.பி.டி.பி.யுடன் தமிழரசு பேச்சுவார்த்தையா! தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் சிறீதரன்…

ஈ.பி.டி.பி.யுடன் தமிழரசு பேச்சுவார்த்தையா! தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் சிறீதரன்…

0

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகச் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி

உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி., “உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

தீர்மானம்

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.

அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அது பற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.”என தெரிவித்துள்ளார்.   

மேலதிக தகவல்: ராகேஷ் 

NO COMMENTS

Exit mobile version