Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்

0

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்க்குழு கூட்டம் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது.

இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

எடுக்கப்பட்ட முடிவு

நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன்.

இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version