Home இலங்கை அரசியல் ஒரு தீவுக்கு போட்டி போடும் இரு நாடுகள்…..

ஒரு தீவுக்கு போட்டி போடும் இரு நாடுகள்…..

0

இந்திய பொது தேர்தல் நேற்று முன்தினம்(ஏப்ரல்19) ஆரம்பித்த நிலையில் தேர்தல் பரப்புரையில் இந்தியாவைப் பற்றி பேசியதை விட இலங்கையைப் பற்றி பேசியது தான் அதிகம் போல. தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாள் தொடங்கியது தான் இந்த கச்சத்தீவு விவகாரம்…

இந்தியாவும் இலங்கையும் நகமும் சதையும் போல எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் கொஞ்ச நாளாக அந்த உறவில் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்ற ஏக்கம் சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்பட, ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சில அரசியல்வாதிகளுக்கு பூரிப்பாகவும் இருந்தது.

இது இவ்வாறு இருக்க கச்சத்தீவைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்றத்திடம் செல்ல உள்ளதாக நரேந்திர மோடி வெளியிட்ட கருத்து மக்கள் மத்தியில் பேசு பொருளாகி விட்டது. இலங்கையின் இனப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்காத சர்வதேச நீதிமன்றம் சில சமயம் இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கிவிடும் போல…

இலங்கையின் அபிவிருத்தியில் இருந்து அனர்த்தம் நிகழ்கின்ற வரைக்கும் எல்லாவற்றுக்கும் பார்த்து பார்த்து உதவி செய்கின்ற இந்தியா பல மில்லியன் நிதியுதவியையும் பல திட்டங்களையும் இலங்கையில் ஆரம்பித்துவிட்டு போயும் போயும் ஒரு 285 ஏக்கர் கொண்ட சிறு தீவுக்கு போட்டி போடுகின்றதென்றால் கொஞ்சம் கேலியாகத்தான் இருக்கின்ற போதிலும் இதற்குப் பின்னால் இருக்கும் பெரிய திட்டம் பற்றி அதிகம் சிந்திக்கவும் வேண்டும்.

1974 வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் கடந்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கின்றதென்றால் ஏதோ ஒரு இரகசியம் இருக்கின்றது தான்.

இலங்கைக்குள்ளேயே நிலத்துக்காக அடிபடும் போது வேறொரு நாடு அடிபடுவது என்பது நமக்கு புதிதல்ல. ஆனாலும் தமிழர்களின் நிலங்களை சிங்களவர்கள் அபகரிக்கும் போது அதற்கு ஆதரவு வழங்கும் இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன நம்பிக்கை உண்டு. ஏனெனில் கச்சத்தீவும் தமிழர் தாயகத்தில் அமைந்திருப்பதால் அதனை தட்டிப் பறிக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய அவா…

இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற அரச தலைவர்களின் சந்திப்புகளின் போதும் அரசியல்வாதிகள் மாறி மாறி இரு நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசிக் கொள்ளாத இந்த விவகாரம் இன்று ஏன் பேசப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயம் தான்.

அதைவிட இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் பல வருடங்களாக பேசப்படுவதுடன் கைதுகளும் விடுதலைகளும் மாறி மாறி இடம் பெற்ற போதும் கடற்பரப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் பேசப்படாத கட்சி விவகாரம் இன்று ஏன் பேசப்படுகின்றதோ அதற்குப் பின்னால் உள்ள காரணம் தான் என்னவோ…

தேர்தல் பரப்புரையில் சாத்தியமாகாத ஒன்றைப் பற்றி பேசுவது தான் அரசியல் வாதிகளுக்கு ஒரு பழக்கம். அந்த வகையில் இந்திய அரசியலிலும் கச்சத்தீவை சொந்தமாக்கிக் கொள்வோம் என்ற சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் போல.

இந்த நிலையில் இலங்கை அரசியல்வாதியான சந்திமா விஜேகுணவர்தன இந்திய அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரத்திற்காகவே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அதனை மறந்து விடுவார்கள் என அண்மையில் தெரிவித்துள்ளார்.

அதுவும் சரி போலத்தான் தெரிகின்றது.

இந்திய பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜுன் 4 இற்கு பிறகு தான் கச்சத்தீவு விவகாரத்திற்கும் தீர்வு வரும் போல. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் கச்சத்தீவு யாருக்கு சொந்தமாகப் போகின்றதென்று..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version