இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில்
தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்
பரிசில்கள் பகிர்தல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் தலைமையில் நேற்றைய தினம் (28.12.2024) காலை 09.00 மணிக்கு
மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்விக்கான உதவி
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில்,
வெளிநாட்டில் தொழில்புரிபவர்களால் நாட்டிற்கு அந்நியச் செலாவணி
கிடைத்துவருவதாகவும், பதிவு செய்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கான
விழிப்புணர்வுகள் அதிகம் தேவை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், போட்டி நிறைந்த கல்விச் சூழலில் விடாமுயற்சியாக கற்று உயர்வு அடைய
வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தினால் வழங்கப்படும் கல்விக்கான உதவியானது ஒரு ஊக்கப்படுத்தலாகும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண மாவட்ட
அலுவலகத்திற்கான பொறுப்பதிகாரி, வெளிநாட்டு
வேலைவாய்ப்பு அமைச்சின் மாவட்ட இணைப்பாளர்,
பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து
கொண்டனர்.