இலங்கையில் இன்று (21) 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இலங்கையில் கடந்த 2022ல் ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை விட்டு விலகியதும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17ஆம் திகதி முடிவடைகிறது.
ஜனாதிபதி தேர்தல்
இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 18ஆம் திகதியுடன் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடிவடைந்துள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்காக நாடாளாவிய ரீதியில் மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
மேலும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகிறார்.இவரை தவிர 38 பேர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசநாயக்க (Anura Kumara Dissanayake) சஜித் பிரேமதாச (Sajith Premadasa )ஆகிய மூவரிக்கிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மும்முனை போட்டி
இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.
உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.