Home இலங்கை இலங்கையின் முதலீட்டுக் கொள்கைகள் : அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை

இலங்கையின் முதலீட்டுக் கொள்கைகள் : அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை

0

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைத்து முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தாலும், அரசாங்கத்தின் பழைய மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச செல்வாக்கு கொண்ட சித்தாந்தங்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் சந்தேகத்துடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அத்துடன், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாகக் கூறும் அமெரிக்கா, இலங்கை முதலீட்டுச் சபை பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் என்ற போதிலும், அவர்களுடன் நிலையான மற்றும் வெளிப்படையான உரையாடலை பேணுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே,தேவையற்ற கட்டுப்பாடுகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளின் பலவீனமான பதிலளிப்பு போன்றவையும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு உள்ள ஏனைய பிரச்சினைகளாக அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

ஜனாதிபதி பகிரங்கமாக உறுதி

இதேவேளை, இந்திய நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி (Adani Green Energy), இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து விலகியதை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குக் காரணம், முன்னர் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகளே என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் கையூட்டல் கோரிக்கைகள் குறைந்துள்ளதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், குறிப்பாக சில சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்பட்ட துறைகளில் நிறுவன ரீதியிலான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version