கட்டுநாயக்காவிலிருந்து (Katunayake) சிங்கப்பூர் (Singapore) நோக்கி நேற்று (05) மாலை புறப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவில் (Indonesia) அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நமு சர்வதேச விமான நிலையத்தில் (Kuala Namu International Airport in Medan) தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
புறப்படவுள்ள மற்றொரு விமானம்
எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதரின் தலையீட்டால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறிலங்கன் விமானத்தைப் பரிசோதிக்க இலங்கை தொழில்நுட்பக் குழு ஒன்று இன்று (06) காலை ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகளை மீண்டும் அனுப்புவதற்காக இன்று மதியம் 1:45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
