நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான “Airline Ratings” நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த சிறிலங்கன் எயார்லைன் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையான சூழ்நிலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இல் செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த விமானத்தில் பணிபுரிந்த கேப்டனுக்கும், துணை விமானிக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையான சூழ்நிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள்ளார், அவர் கழிப்பறையிலிருந்து திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது.
விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
முறைப்பாடு
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமானி சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்படி கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
மேலும், விசாரணைகள் தொடர்வதால் சம்பவத்துடன் தொடர்புடைய கேப்டன் வஜிர வனசிங்கவும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.