Courtesy: Sivaa Mayuri
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய மூன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், குறித்த விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விமானமும், தமது பயணத்தை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுவது வழக்கமாகும்.
இதன்போதே இந்த பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.
தொழில்நுட்ப கோளாறு
இந்தநிலையில், குறித்த மூன்று விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்று பிற்பகல் இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மற்றும் சென்னையில் இருந்து இரவு 10:15 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த விமானம் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து கட்டுநாயக்கவை இரவு 10:10 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட விமானமும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து இரவு 10.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தகவல் அளித்துள்ளதுடன், அவர்கள் இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று விமானங்களையும் ஏற்பாடு செய்துள்ளது.