‘கிளீன் ஸ்ரீ லங்கா’ ஆணைக்குழுவில் தமிழ் பேசுபவர்கள் யாரும் இல்லை என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி
வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும்
தெரிவிக்கையில்,
“பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத
நிலைப்பாடு குறித்த சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நிலைப்பாடு
இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் கோட்டாபய
ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழு என்கின்ற, தமிழ் பேசும்
மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்த ஆணைக்குழுவிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள்
இடம்பெறவில்லை.
அந்த பொதுஜனப் பெரமுன அரசும் தொல்லியல் ஆணைக்குழுவும் இனமத
அடிப்படைவாத, அடிப்படையில்தான் அமைந்திருந்தது.
அதன் செயற்பாடுகளான தொல்லியல்
இடங்களை இனங்காணும் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைக்கும்
செயற்பாடுகளும் அடிப்படைவாத செயற்பாடுகளாகவே இருந்தன.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியால் அமைக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா
ஆணைக்குழுவில், தமிழ் பேசுனர் இடம்பெறாத நிலைமையும் சந்தேகத்தைத் தருகின்றன” என்றுள்ளார்.