நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள லங்கா சதோச கடைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பொதுச் சந்தை வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தை புதுப்பித்த பின்னர் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “2025 ஆம் ஆண்டுக்குள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக 150க்கும் மேற்பட்ட சதோசா கடைகளைத் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
பொருட்களின் விலை குறைப்பு
அடுத்த மூன்று ஆண்டுகளில் வாடிக்கையாளர் சேவை மையங்களாக சதோசா கடைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கடந்த மூன்று மாதங்களில் பொருட்களின் விலையை 17% குறைத்துள்ளோம். கடந்த மாதம் 40 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 8% குறைக்கப்பட்டுள்ளன.
எனவே, பொருட்களின் விலைகளைக் குறைத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்காக சதோச கடை வலையமைப்பை விரிவுபடுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”என்றார்.