Home இலங்கை சமூகம் ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் சூளுரை!

ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் சூளுரை!

0

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியற் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் குறிப்பிட்டார்.

பொங்கு தமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நாள் நிகழ்வுகள் நேற்று( 17.01.2025) வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய நீக்கத்தை இல்லாதொழிக்க பகீரத பிரயத்தனம்

திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ்ப் பிரகடனம் என்பவற்றை நீர்த்துப் போகச் செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினை இல்லாதொழித்து தமிழ் தேசிய நீக்கத்தினை முன்னெடுப்பதற்கு சிறிலங்காவின் ஆட்சிகள் முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆக்கிரமிப்புக்களாலும், அச்சுறுத்தல்களாலும் மேற்கொள்ளப்பட முடியாத தமிழ் தேசிய நீக்கத்தை தமிழ்த் தலைவர்கள் எனும் பெயரால் தமிழ் தேசியப் போலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக்கி அவர்களூடாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கப்போகின்றோம் எனும் உரையாடலின் ஊடாக அதிகாரப் பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்றதொன்றை வலுமிக்கதொன்றாக காண்பிக்கும் தோற்றப்பொலிவை உருவாக்க சிறிலங்கா அரசு முனைப்புக் காட்டுகின்றது.

  “ஏக்கிய ராஜ்ஜிய” எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு

நல்லாட்சிக்காலத்தில் வரையப்பட்ட “ஏக்கிய ராஜ்ஜிய” எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபினை தமிழ் மக்களின் பிரதிநிதிநிதிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதனூடாக முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

 இவ்வாறானதொரு சூழ்நிலையில் பரந்து பட்ட ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினையே தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முன்வைக்க வேண்டும். என்பதோடு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய வரைபுகளை முற்றாக எதிர்ப்பதற்கு முன்வர வேண்டுகின்றோம்.

  தமிழ் தேசியம் தேர்தல் அரசியலிற்கு அப்பாலானதொன்று

  தமிழ் தேசியம் தேர்தல் அரசியலிற்கு அப்பாலானதொன்று! தமிழ் தேசியக் கட்சிகள் மக்களாணையை மீறிய கடந்த கால செயல்களின் விளைவே அவர்களின் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆசனங்களின் குறைவிற்குக் காரணமாகும். அவர்களின் ஆசனங்களின் இருப்பானது ஒரு போதும் தமிழ் தேசியத்தின் இருப்பை பிரதிபலிக்கப் போவதுமில்லை! வீழ்ச்சியடையச் செய்யப்போவதுமில்லை! தமிழ் தேசியத்தை தேர்தல் அரசியலிற்கு அப்பால் மக்களை அரசியற்படுத்தி, அணிதிரட்டி மக்கள் அரசியலை முன்னெடுக்க தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகள் தவறிவிட்டன.

2009 இற்குப் பின்னர் தனியே அரசியல் விடுதலையை மட்டும் நோக்கிச் சிந்தித்தமையே பின்னடைவுகளிற்குக் காரணமாகும். சமூகவிடுதலை, பெண்ணிய விடுதலை, வர்க்க விடுதலை என்பவற்றில் கவனம் செலுத்தாமல் தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்த முடியாது. நாங்கள் அடையாள அரசியலிற்கு உரிய மக்கள் கிடையாது. நாங்கள் இறைமை அரசியலை முன்னெடுப்பதற்குரிய, சுயநிர்ணய உரித்திற்குரிய தேசிய இனம்.

காணி விடுவிப்பை முன்னெடுக்காமல் பொங்கல் நிகழ்வு 

தற்போதைய ஜேவிபி அரசாங்கம் வலி-வடக்கில் காணி விடுவிப்புக்களை முன்னெடுக்காது தேசிய பொங்கல் நிகழ்வினை வலி-வடக்கிலேயே முன்னெடுக்கின்றமையானது தமிழ் மக்களை மடையர்களென்றெண்ணிச் செயலாற்றுவதாகும்.

செயல் அரசியலிற்கு அப்பால் இந்த ஜேவிபி அரசு செய்தி அரசியலை நம்பியே ஆட்சிக்கு வந்தது, ஆட்சியை நடத்துகின்றது.

ஒரு சில வீதித்தடைகளை மட்டும் நீக்கி விட்டு, இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவித்து விட்டதாக சமூக வலைத்தளங்களை நம்பி நுண் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version