“தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற சுமந்திரனின் ஆட்டம் இனி முடிவுக்கு வரும் என்று அந்த கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்தினர்.
அதிருப்தி
இதன்போது கருத்து தெரிவிக்கையில் மகளிர் அணித் தலைவி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,”எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது.
இந்த பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
பெண்கள் விண்ணப்பிக்கவில்லை
நாடாளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் என பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.
எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார்.
இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.
எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்கு துதிபாடுபவர்களை வேட்பாளர்களாக சுமந்திரன் நிறுத்தியுள்ளார்.
அப்படியாயின் முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்.? மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் புருடா விடுகின்றார்.
வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது.
ஆட்டம் இனி முடிவுக்கு வரும்
எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.
இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடு பவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.
எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார்.
முன்னர் விண்ணப்பித்தவர்களை புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக் கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத் தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.