Home இலங்கை அரசியல் சுமந்திரனின் தொடர் தோல்விகள்.. தமிழரசுக்கட்சியின் திடீர் தீர்மானம் – யோதிலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

சுமந்திரனின் தொடர் தோல்விகள்.. தமிழரசுக்கட்சியின் திடீர் தீர்மானம் – யோதிலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

0

சுமந்திரன் சந்தித்த பல்வேறு தோல்விகளே அவரை ஒருங்கிணைந்த அரசியலுக்குள் தற்போது
தள்ளுகிறது என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையில் அவர், “நீண்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து
செம்மணிக்கான கையெழுத்துப் போராட்டத்தை அறிவித்துள்ளன. தமிழரசுக் கட்சியைத்
தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஏற்கனவே புரிந்துணர்வு அடிப்படையில் ஒருங்கிணைந்து
தான் உள்ளன.

கையெழுத்துப் போராட்டம்.. 

தமிழரசுக்கட்சி ஒருங்கிணைவுக்கு வந்தது தான் இங்கு முக்கியமானது.
இந்த ஒருங்கிணைவு தேர்தல்களிலும் தொடருமா என்பதை காலம்தான் தீர்மானிக்க
வேண்டும்.
ஒருங்கிணைந்து செயற்படுவதற்காக அனைத்துக்கட்சிகளிலும் கையெழுத்திட்டாலும்
கையெழுத்துப் போராட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியே முனைப்புடன்
செயற்படுவதான ஒரு தோற்றம் தெரிகிறது.

ஏனையவை பங்காளிகளாக இல்லாமல் ஆதரவாளர்
போன்றே செயற்ப்படுகின்றன. விமர்சனக் கருத்துக்களும் குறைவுகள் இல்லை. தமிழ்த்
தேசியப் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்
பொ.ஐங்கரநேசன் கையெழுத்துப் போராட்டம் என்பது நோகாமல் மேற்கொள்கின்ற போராட்டம்
அதனால் பெரிய பயன்கள் கிடைக்கப் போவதில்லை என விமர்சனம் செய்திருக்கின்றார்.

ஒருங்கிணைவு கோரிக்கையை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவு தட்டிக்
கழித்தே வந்தது. சுமந்திரன் அதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். அவரது
கொழும்பு மைய அரசியல் பலவீனப்பட்டு விடும் என்பதாலும், தனித்த ஓட்டத்தை
மேற்கொள்ள முடியாது என்பதனாலும், தமிழரசுக் கட்சி பெரியண்ணன் பாத்திரம்
சரிந்து விடும் என்பதனாலும் ஒருங்கிணைவு அரசியலை அவர் தட்டிக் கழித்து
வந்தார்.

ஆனால் இந்தத் தடவை ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் இனிமேல் தொடர்ந்து
நகர முடியாது என்பதனால் ஒருங்கிணைவு அரசியலுக்கு வந்திருக்கின்றார்.

இதன்
நேர்மைத் தன்மை பற்றி வரலாறு தான் பதில்களைக் கூறும். இவ்வாறு சுமந்திரன்
ஒருங்கிணைவு அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டியமைக்கு பின்னால் பல காரணங்கள்
தொழிற்பட்டிருக்கின்றன அதில் முதலாவது சுமந்திரனின் கதவடைப்பு போராட்டம்
தோல்வியடைந்தமையாகும்.
அது யாழ் மாவட்டத்தில் முழுமையான தோல்வியைத் சந்தித்தது என்று கூறலாம்.

யாழ்
வர்த்தக சங்கம் நேரடியாகவே முகத்தில் அறைந்தால் போல் ஒரு கட்சி மட்டும்
முன்னெடுக்கும் கதவடைப்பு போராட்டத்திற்கு எம்மால் ஆதரவு தர முடியாது எனக்
கூறியிருந்தது. யாழ் நகர மேயர் கூட்டத்தின் இடை நடுவில் எழும்பிச் சென்ற
நிகழ்வும் நடந்தேறியிருக்கின்றது.
மடுவிலும், நல்லூரிலும் பண்பாட்டுப் பெருவிழா நடந்து கொண்டிருந்த காலத்தில்
மதத் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் கதவடைப்பை அறிவித்தமை மக்களிடையே
அதிர்ப்தியை உருவாக்கியிருந்தது.

சுமந்திரன் மன்னார் ஆயரைச்சந்திக்க முயன்ற போதும் அவர் அதனை நிராகரித்தார்.
இதனால் குரு முதல்வருடனேயே சுமந்திரனால் உரையாட முடிந்தது. குரு முதல்வர்
கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்தக் கண்டனம் காரணமாக கதவடைப்பு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

முழுநாள்
கதவடைப்பு அரைநாளாகவும் திருத்தப்பட்டது எனினும் நல்லூர் விவகாரம் இங்கு
கவனத்திலெடுக்கப்பட்டவில்லை. நல்லூர் நிர்வாகமும் இதைப் பற்றி பெரிதாக
அலட்டிக் கொள்ளவில்லை. தேர்த்திருவிழாவை ஒட்டிய நாட்களில் சனக் கூட்டம்
அதிகமாக இருக்கும் என்பது சுமந்திரனுக்கு தெரியாத ஒன்றல்ல.

கதவடைப்பின் தோல்வி சுமந்திரனுக்கு அவரது தனித்த உயரம் எவ்வளவு என்பதை
அவருக்கு தெளிவாகக் காட்டியது.

இனிமேல் கூட்டு உயரங்களால் தான் மேலே செல்ல
முடியும் தனித்து உயரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்ற உண்மையை
சுமந்திரன் நேரடியாக தரிசித்துக் கொண்டார். இந்த உண்மையை தமிழ் அரசியலில்
அண்மைக்காலங்களில் புரிந்து கொண்டவர் கஜேந்திரகுமார் தான்.

நாடாளுமன்றத்
தேர்தல் அந்த உண்மையை அவருக்கு வெளிக்காட்டியதால் உடனடியாகவே அவர் தன்னை
மாற்றிக்கொண்டார். தமிழ்த்தேசிய அரசியல் சிதைந்து விடும் என்ற அச்சமும்
ஒருங்கிணைவு அரசியலுக்கு அவரை ஊக்குவித்திருந்தது.
வரலாற்று ரீதியாக ஒருங்கிணைவு அரசியலின் தேவையை முதன் முதலில் புரிந்து
கொண்டவர் தந்தை செல்வா தான்.

1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு,
அரசியல் யாப்பு ரீதியாகவே தமிழ் மக்களை அரசியல் அதிகாரக் கட்டமைப்பிலிருந்து
தூக்கி எறிந்த போது ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் முன்னேறிச் செல்ல முடியாது
என்பதை தந்தை செல்வா அனுபவரீதியாக புரிந்து கொண்டார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வீடு தேடிச் சென்று கலந்துரையாடி தமிழர் விடுதலைக்
கூட்டணியில் அவரை இணைத்திருந்தார். பரம எதிரியாக செயற்பட்ட அடங்காத் தமிழன்
சி.சுந்தரலிங்கத்தையும் ஒருங்கிணைவு அரசியலுக்குள் கொண்டு வந்தார்.

மலையகத்
தமிழர்களை இணைக்க வேண்டும் என்பதற்காக தொண்டமானையும் கொண்டு வந்தார்.
காலப்போக்கில் தமிழ் ஈழக் கோரிக்கைக்குள் மலையக மக்களை அடக்க முடியாது
என்பதால் தொண்டமான் தனி வழி சென்றார் என்பது வேறு கதை.
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவிற்குப் பின்னர் கட்சி அரசியல் காரணமாக குமார்
பொன்னம்பலம் தனி வழி சென்றதும் வரலாறு.

இரண்டாவது காரணம் கொழும்பு மைய அரசியலில் இருந்து தான் விலகிக் கொண்டுள்ளதாக
காட்ட வேண்டிய தேவை சுமந்திரனுக்கு ஏற்பட்டதாகும். கொழும்பு மைய அரசியல்
என்பது கொழும்பு அரசியல் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கும்
அரசியலாகும்.

கொழும்பு அரசியல் என்பது எப்போதும் சிங்கள பௌத்த பெருந்தேசிய
வாதத்திற்கு கட்டுப்பட்டதாகவே இருக்கும். எனவே சுமந்திரன் முன்னெடுத்திருந்த
கொழும்பு மைய அரசியல் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு பாதிப்பு ஏற்படாத
வகையில் மேற்கொண்ட அரசியல் தான்.

நண்பர் ஒருவர் “சுமந்திரனின் அனைத்து
தவறுகளுக்கும் காரணம் அவரது கொழும்பு மைய அரசியல் தான்” என்று கூறினார்
“ஏக்கிய ராச்சி;ய” “இனப்படுகொலை நடைபெறவில்லை. சர்வதேச விசாரணை முடிந்து
விட்டது.”

என்கின்ற சுமந்திரனின் கடந்த கால கருத்துகள் எல்லாம் கொழும்பு மைய
அரசியலின் வெளிப்பாடுகள் தான்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் போட்டியில் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி,
கதவடைப்பு போராட்ட தோல்வி என அடுத்தடுத்த தோல்விகள் கொழும்பு மைய
அரசியலிருந்து விலக வேண்டிய அல்லது விலகுவதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை
அவருக்கு உருவாக்கின. இதனால் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை அவர்
தீவிரமாக முன்வைத்து வருகின்றார்.

கதவடைப்பு போராட்ட அறிவிப்பு, செம்மணி
விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டுமென ஐ.நாவிடம் கோரியமை, ஒருங்கிணைவு
அரசியலுக்கு முன்வந்தமை என்பன கொழும்பு மைய அரசியலிருந்து விலகுவதாக காட்டும்
வெளிப்பாடுகள் தான்.

சுமந்திரனிடமுள்ள சாதகமான அம்சம் அவர் ஒரு இயங்கு நிலை அரசியல்வாதியாக
இருப்பதுதான். தமிழ்த் தேசிய அரசியலில் அவர் நேர்மையான நிலைப்பாட்டை
முன்னெடுப்பாராயின் அவர் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கொழும்பு அரசியல் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதத்திற்கு கட்டுப்பட்டு
இருப்பதால் சுமந்திரன்;, சம்பந்தன் போன்றவர்களைக் கூட அதனால் திருப்திப்படுத்த
முடியவில்லை. இதனால் தமிழ்ச் சூழலில் கொழும்பு மைய அரசியலை முன்னெடுத்தவர்கள்
வரலாற்றில் தோல்விகளையே தழுவியிருந்தனர்.

இந்தத் தோல்வியைத் தழுவியவர்களில்
சம்பந்தனும் சுமந்திரனும் முதல் நபர்கள் அல்லர். ஏற்கனவே ஜீ.ஜீ.பொன்னம்பலம்,
சி.சுந்தரலிங்கம், நீலன் திருச்செல்வம் ஆகியோரும் தோல்விகளையே தழுவியிருந்தனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும், சி.சுந்தரலிங்கமும் தோல்விகளை ஏற்றுக்கொண்டு
பிற்காலங்களில் தாயகமைய அரசியலுக்கு வந்தனர். நீலன் திருச்செல்வம் தோல்விகளை
அனுபவரீதியாக உணர்ந்து கொள்வதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருந்தார்.
கல்வியாளர்களில் தந்தை செல்வாவின் மருமகனான ஏ.ஜே.வில்சன் கொழும்பு மைய
அரசியலிலேயே நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1978 ஆம் ஆண்டு
இரண்டாவது குடியரசு யாப்பை உருவாக்கிய போது அவரும் பங்களித்திருந்தார். 1981
ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை சட்டம் அவரது பங்களிப்பினாலேயே
உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத்
தீர்மானத்தையும் அவர் ஏற்கவில்லை.

கடுமையாக அதனைக் கண்டித்திருந்தார் ஆனால்
அவரது கடைசி காலங்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தவிர்க்க முடியாதது எனக்
கூறியிருந்ததாகவும் செய்திகள் வந்தன.

டக்ளஸ் தேவானந்தா.

அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கொழும்பு
சார்பு அரசியலையே பின்பற்றியிருந்தனர் எனினும் அது கொழும்பு மைய அரசியல் அல்ல
முழுக்க முழுக்க எடுபிடி அரசியலே. இரண்டு அரசியலும் கொழும்பின் நலனை
பாதுகாக்கவே முனைந்தன என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இவர்களுக்கு பதவியும்,
அரச வளங்களும் இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. தற்போது இவர்களின்
தளத்திற்குள் தேசிய மக்கள் சக்தி நுழைந்து விட்டதால் அரசியல் அனாதைகளாகி
விட்டார்கள்.

மூன்றாவது காரணம் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்
மக்களின் தொடர்ச்சியான அழுத்தமாகும். பெருந்தேசிய வாத ஆக்கிரமிப்புக்கு முகம்
கொடுத்தல், சர்வதேச அரசியலைக் கையாளல், பொறுப்புக் கூறலை வற்புறுத்தல் அரசியல்
தீர்வை வலியுறுத்தல் தேசிய மக்கள் சக்தியின் ஊடுருவலைத் தடுத்தல்
போன்றவற்றிக்கு ஒருங்கிணைந்த அரசியல் மிகவும் அவசியமாக இருந்தது.

ஒருங்கிணைந்த
அரசியல் இல்லாமல் இந்த விவகாரங்களில் ஒரு அடி கூட நகர முடியாத நிலை இருந்தது.
இதனால் தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களைக்
கொடுத்தனர்.

இதற்காக சாம, பேத, தான, தண்டம் அனைத்தையும் வழங்குவதற்கு தயாராக
இருந்தனர். இந்தத் தொடர் அழுத்தமும் சுமந்திரன் பிரிவினர் ஒருங்கிணைந்த
அரசியலை நோக்கி நகர்வதற்கு உந்துதலை வழங்கியது.

ஒருங்கிணைந்த அரசியலை
முன்னெடுத்தால் அனைவரும் தப்பிப்பிழைப்போம் இல்லையேல் அனைவரும் மரணிப்போம்
என்பதே யதார்த்த நிலையாகும்.

ஒருங்கிணைவு அரசியலுக்காக சிவில் அமைப்புகள் கடந்த காலங்களில் கடுமையாக
உழைத்திருந்தன.

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பும், திருமலை ஆயரும் இதில்
முன்னணியில் நின்றனர். ஆயர் இராயப்பு யோசேப் இதற்காக மன்னாரில் அரசியல்
கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் இணைத்து ஒரு கலந்துரையாடலையும்
நடத்தினார். கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்காததினால் அம் முயற்சிகள்
தோல்வியைத் தழுவின.

இந்தத் தோல்விக்கு அப்போதய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே
பிரதான காரணியாக இருந்தது.
அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தனின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள்
இருந்தது. சம்பந்தன் சிறிய ஒத்துழைப்புக்களைக் கூட வழங்க முன்வரவில்லை.
கலந்துரையாடலின் போது சம்பந்தன் நேரடியாகவே ஆயர் இராயப்பு யேசேப்பிடம்
“நீங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் நாங்களே தீர்மானங்களை எடுப்போம்” என
இறுமாப்பாக கூறியிருந்தார். சம்பந்தனின் கொழும்பு மைய அரசியலே இவ்
ஒத்துழைப்பின்மைக்கு காரணமாக அமைந்தது.

தற்போது சிவில் அமைப்புகள் கட்சிகளை
ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முழுமையாக கைவிட்டுள்ளன. கட்சிகளின் இருப்பிற்கு
பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தாமாகவே ஒருங்கிணைவு அரசியலுக்கு அவை முன் வந்துள்ளன.
கட்சிகளின் இந்த ஒருங்கிணைவு முதலாவது கட்டத்தில் தான் இருக்கின்றது.

இக்கட்டத்தில் விவகாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைவே சாத்தியமாகும். செம்மணி
விவகாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்தமை மகிழ்ச்சிக்குரியதே! இதனைத் தேர்தல்
கூட்டு நோக்கியும் தொடர்ந்து கொள்கைக் கூட்டு நோக்கியும் வளத்தெடுக்க
வேண்டும். கொள்கையில்லாத ஒருங்கிணைவு நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது.

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் சாத்தியங்கள் உள்ளன. தமிழ்த்
தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் பாரிய
பின்னடைவுகள் ஏற்படலாம்.

தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு பெரியளவிற்கு
குறையடையவில்லை. கடந்த உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில் கட்சிகள் தேர்தல்
கூட்டில் இணையாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு
நின்றதால் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை நிலையைத் தகர்க்க முடிந்தது.
ஆனாலும் வாக்கு வங்கியில் பெரிய வீழ்ச்சியைக் காட்ட முடியவில்லை.

இரண்டாவது
பெரிய சக்தியாக தேசிய மக்கள் சக்தியே நிலைத்தது. அந்தத் தேர்தலில்
ஒருங்கிணைந்து போட்டியிட்டிருந்தால் வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தி வெல்வதை
தடுத்திருக்க முடியும்.

உரும்பராய் கிராமம் தமிழ்த் தேசிய அரசியலில் உறுதியாக நின்ற கிராமம்.

தியாகி
சிவகுமாரன், மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன், ஈரோஸ் தலைவர்களில் ஒருவரான
சங்கர் ராஜி, தமிழ்த் தேசியக் கொள்கை உருவாக்குனரான மகா உத்தமன் என்போர்
உரும்பிராய் மண்ணினைச் சேர்ந்தவர்களே! உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் போது
உரும்பிராயில் உள்ள நான்கு வட்டாரங்களில் மூன்றில் தேசிய மக்கள் சக்தி வெற்றி
பெற்றிருந்தது.

ஒரு வட்டாரத்தில் மட்டும் சங்குக் கூட்டணி வெற்றி பெற்றது.
எனவே கடந்த தேர்தலின் படிப்பினை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நல்ல பாடமாக
இருக்க வேண்டும்.

எனவே முதலாவது கட்டத்தில் விவகாரங்களின் அடிப்படையிலான ஒருங்கிணைவுக்கு
செல்லலாம். இரண்டாவது கட்டத்தில் தேர்தல் கூட்டிற்கும், மூன்றாவது கட்டத்தில்
கொள்கைக் கூட்டிற்கும் செல்லலாம். நான்காவது கட்டத்தில் சிவில் அமைப்புகளையும்
இணைத்த மாபெரும் தேசியப் பேரியக்கத்தை நோக்கி வளரலாம்.

சிவில் அமைப்புகளிலும் ஒருங்கிணைவு பலவீனமானதாகவே உள்ளது. பல சிவில்
அமைப்புகள் கட்சி சார்ந்து செயல்படுவதும் இதற்கு ஒரு காரணம். இவற்றையெல்லாம்
கடந்து கொள்கைக் கூட்டு நோக்கி பயணிப்பதற்கு சிவில் அமைப்புகள் தயாராக
வேண்டும்.

கஜேந்திரகுமார் அரசியல் கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் இணைத்த
தேசியப்பேரியக்கத்திற்கு அத்திவாரத்தை இட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள்
பேரவைக்கு கடிதம் அனுப்பும் முயற்சியை சிவில் அமைப்புகளையும் இணைத்து
மேற்கொண்டார். இந்த முயற்சி மேலும் வளர வேண்டும். சுமந்திரன் பிரிவு
ஒருங்கிணைவு அரசியலை நோக்கி வருவதற்கு அவரின் முயற்சிகளும் ஒரு காரணம் எனலாம்.
தொடர்ந்து தனிமைப்படுவதை சுமந்திரன் பிரிவு விரும்பியிருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version