Home இலங்கை அரசியல் முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் – சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்!

முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் – சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்!

0

சுமந்திரனை நோக்கி சில கேள்விக்கணைகளை தொடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அவை தவறாக இருந்தால் தனக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

சுகாஷ் மக்களை தவறாக வழி நடத்துவதாக சுமந்திரன் தெரிவித்த நிலையிலேயே சுகாஷ்
இவ்வாறு கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

 இலங்கை அரசு

அவர் கேள்வி எழுப்புகையில்,

1) நீங்கள் பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்த 2010களில் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற பகிரங்க விவாதத்தில் “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது”
என்று கூறி விடுதலைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்தது நானா? நீங்களா?

2) தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று பச்சைப்
பொய்யைக் கூறி இலங்கை அரசைக் காப்பாற்றியது நானா? நீங்களா?

3) தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை (Genocide) வெறும் “யுத்தக்
குற்றங்கள்” (War crimes) என்று மலினப்படுத்தியது நானா? நீங்களா?

4) 2015 – 2019 மைத்திரி – ரணில் ஆட்சியில் அறிமுகப்படுத்த முற்பட்ட
ஒற்றையாட்சிக்குட்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய யாப்பைச் சட்டம் தெரிந்த சட்டத்தரணியாக
இருந்தும்  “சமஷ்டி” என்று பொய்யுரைத்தது நானா? நீங்களா?

 தமிழினம்

5) முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலோடும் ராஜபக்சகளோடும் மாறி மாறிக்
கொஞ்சிக்குலாவி தமிழினத்தையே சிங்களத்திடம் அடகு வைத்தது நானா? நீங்களா?

6) சிங்கள பௌத்த பேரினவாத JVPயோடு சேர்ந்து மே தின ஊர்வலத்தில் பங்கேற்றுச்
சிங்களக் கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் அங்கீகாரம் கொடுத்தது நானா?
நீங்களா?

7) தமிழினத்திற்கான தீர்வைப் பெறக்கூடிய பல சந்தர்ப்பங்களை அற்பச்
சலுகைகளுக்காகச் சிங்களத்திடம் அடமானம் வைத்தது நானா? நீங்களா?

8)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையைக் கோராது உள்ளக
விசாரணையான “கலப்புப் பொறிமுறைக்கு” இணக்கம் தெரிவித்து ஒட்டுமொத்தத் தமிழ்
மக்களுக்கும் துரோகமிழைத்தது நானா? நீங்களா?

9) தமிழ் மக்கள் இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்துநிற்க STF பாதுகாப்பில் உலா
வந்தது நானா? நீங்களா?

10) இராணுவத்துக்கு எதிராக ஹர்த்தால் என்று நாடகமாடிவிட்டு, உலகத்திலேயே முதல்
தடவையாக காலையோடு ஹர்த்தாலை நிறைவுசெய்த அரசியல் வேடதாரி நானா? நீங்களா?

அரசியல் துரோகங்கள்

இப்படி உங்களின் அரசியல் துரோகங்களும் திருகுதாளங்களும் இன்னும் நிறையவே
இருக்கின்றது.

மக்களைத் தவறாக வழிநடாத்துபவனாக இருந்திருந்தால், நீங்களும் உங்கள் மகளும்
ஒன்றாக இருந்த புகைப்படத்தைச் சிலர் தப்பாகச் சிருஷ்டிக்க முற்பட்டபோது,
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முதலாவது நபராக முன்வந்து பகிரங்கமாக அந்த
விடயத்தைக் கண்டித்திருக்க மாட்டேன்.

இப்பொழுதும் கூறுகின்றேன், தமிழினத்தின் தற்போதைய கையறு நிலைக்கு நீங்களும்
உங்கள் கட்சியுமே பிரதான காரணம்.

நான் ஏதேனும் தவறாக அல்லது பொய்யாக எழுதியதாகக் கருதினால், நீங்கள் தாராளமாக
எனக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

நீதிமன்றத்தில் சந்திப்போம்.
தயவுசெய்து இனியாவது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தாது
திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள், அல்லது வரலாறு உங்களை மன்னிக்காது என
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version