Home இலங்கை அரசியல் கைது செய்யப்பட்ட சஜித் அணியின் முன்னாள் உறுப்பினர் : கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

கைது செய்யப்பட்ட சஜித் அணியின் முன்னாள் உறுப்பினர் : கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

0

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பன்னல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கட்சி தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

தென் கடற்பகுதியில் நேற்று (20.11.2025) போதைப்பொருட்களுடன் கடற்றொழில் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவரை காவல்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இது தொடர்பில் வினவியபோது, கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பன்னல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினால் குறித்த நெடுநாள் கடற்றொழில் படகும் அதில் இருந்த 6 கடற்றொழிலாளர்களும் நேற்று (20.11.2025) மாலை தங்காலை கடற்றொழில் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் படகில் இருந்து 5 பைகளில் 100 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 13 பைகளில் 200 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 261 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான சிக்கல் நிலையே அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்டிகொள்ள காரணம் என அரசாங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version