இலங்கையின் கடந்த 8 ஜனாதிபதி தேர்தல்களிலும் எங்களுடைய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சிங்கள ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் (Srineshan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியைப் பொறுத்தமட்டில் இன்னும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை .
சமாதான தேவதை
கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் சென்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கின்றோம். ஆனால் தமிழர்களின் இனப்பிரச்சினை, யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல பிரச்சினைகளுக்கு எங்களால் வாக்களித்து தெரிவுசெய்யப்பட்ட சிங்கள ஜனாதிபதிகள் தீர்வைப் பெற்றுத்தரவில்லை.
குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) ஒரு சமாதான தேவதையாக எங்களுக்கு காட்சியளித்தார். வாக்களித்தோம் எதுவும் நடைபெறவில்லை. யுத்தத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஏதோ எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ஆனால் எதுவும் செய்யவில்லை.
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அந்தக் காலத்தில் பிரதமராக இருந்தார். நல்லாட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டு பின்னர் அதுவும் கிடைக்கவில்லை.
எனவே கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட 8 ஜனாதிபதிகள் மற்றும் இடைக்கால ஜனாதிபதிகள் இருவர் உட்பட 10 ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்தனர்.
தமிழ் பொது வேட்பாளர்
ஆனால் அவர்களுடைய பார்வை, எண்ணம், சிந்தனை என்பன ஒரு இனத்தின் சார்பான ஜனாதிபதிகளாக நடந்துகொள்கின்றார்களே தவிர உரிமையைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற இனம் சம்பந்தமாக எந்தவொரு தீர்வையும் தரவில்லை.
தற்போது களத்தில் இறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தாலும் மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கு இடையில் தான் மும்முனைப் போட்டி நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் சஜித் பிரேமதாசவா (Sajith Premadasa), ரணில் விக்ரமசிங்கவா, அனுர குமார திசாநாயக்கவா (Anura Kumara Dissanayake) என்ற போட்டி அமைந்துள்ளது. தமிழ் மக்கள் குறித்து நாங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் அவர்களுடைய கையில் இல்லாதது போல் தான் தெரிகின்றது.
இந்த நிலையில் தான் 83 சிவில் சமூக கட்டமைப்புகளும் 7 தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றார்கள்.
கடந்த 8 தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இந்தமுறை ஒரு பொது வேட்பாளர் என்ற எண்ணக்கரு முதன்முறையாக நிறுத்தப்பட்டிருப்பதால் சிங்கள வேட்பாளர்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்தும் சிங்கள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டுமா, பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் என்ன, தாயகப் பிரதேசத்தில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழன் தமிழனுக்கு வாக்களித்தால் என்ன, என்ற சிந்தனை இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.“ என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/RzxRWtTAWpI