அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால்
அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ
போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை
இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு
பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40
பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன
வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம் என்பதுடன் இந்த
இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8
மைல் தொலைவில் வயலூர் கிராமம் 1972 ம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200
குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது.
பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக குடியமர்த்தம்
அரசாங்கம் அக்காலப் பகுதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரவள்ளிக்
கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும் உணவு விடுதிகளில் சோறு சமைக்க கூடாது என
கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை
அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின்
திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டது.
இக் கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிப்பாதை மட்டும் உள்ளதுடன்
நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான
உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன. அதேவேளை
ஏழைகள் வழமையாக இத்தூரத்தை நடந்து சென்று வந்தனர்.
இவர்கள் தடிகள்,களிமண், ஓலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து
குடியமர்த்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை.
இம் மக்கள் மலேரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன் தமது
வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மைலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல
வேண்டியிருந்தது.
இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை
தொடர்ந்து செய்துவந்ததுடன் அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள்,
திருடிச் சென்ற அதேவேளை காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன ஆயினும்
அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து
வந்தனர்.
இராணுவப் படைகள் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன.
இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது இந்த யுத்த
நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான
அரசாங்க குழுவும். (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை
இயக்கங்களான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ்.
ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருந்த சமயம் இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை
கொன்று குவித்தன.
1985ம் ஆண்டு 8ம் மாதம் 24 ம் திகதி அதிகாலைவேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல்
ஆரம்பிக்கப்பட்டது .இத்தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வயலூரின்
தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயாரானவர்
அவருக்கு 3 பெண்பிள்ளைகள் அவர் கூறும் பொழுது இராணுவத்தினரின் வெறியாட்டத்தில்
எனது கணவர் கொல்லப்பட்டார்.
நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்களான மரக்கறிவகைகள். பழமரங்கள்
செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம் ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர் ,கடைகள்,
பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை 1985.8.24 திகதி அதிகாலை 6 மணியிருக்கும்
பொழுது நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு தொகை
மனிதர்கள் துப்பாக்கியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை
அவதானித்தேன் .
நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு நடுங்கினேன் நான் பதற்றப்
பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு
மேல் கேள்வி கேட்டனர் எனக்கு அவை விளங்கவில்லை அப்பொழுது எனது கணவர் வந்ததால்
நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக்
கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர். எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து
சென்றார்.
காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள்
குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும்
வெளியில் வருமாறு கூறியதுடன் வயோதிபர், நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர்
பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர் இதில்
பெண்களும் அடங்குவர்.
அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம்
இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு
நீர் கொண்டுவருமாறு கேட்டனர் அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள்
தண்ணீர் கொண்டுவந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர். ஆனால்
நாங்கள் பட்டினியாக இருந்தோம் ஒரு கோப்பை தேனீர் கூட கிடைக்கவில்லை அவர்கள்
தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர்
ஆனால் எங்கே என்று கூறவில்லை.
அவர்கள். கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிப்பாதை ஊடாக சென்றோம் அப்பொழுது
மற்றுமொரு இராணுவ சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம் அக்குழுவிற்கு
தலைமைதாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக்
கண்டுகொண்டார் இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார் அவர்
கூறும்போது நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை இராணுவ வீர்கள் தமக்கு
அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர் எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின்
கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள் ஆண்கள் திரும்பிவருவார்கள் என்றார்.
நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம் அவர்கள் குமரன் குளத் திசையில்
சென்று கொண்டிருந்தனர் ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை சூரியகதிர் தலையை
சுட்டெரித்தது. எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை
வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச்
செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது எங்கள்
குடிசைகளுக்கு திரும்பிவந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம் அப்பொழுது கொலை
செய்தி வந்தது.
இச் செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர் ஏனையவர்கள் குமரன்
குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார்.
இச் செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன்
நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள
உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம். பின் படுகொலை செய்யப்பட்டவர்களை
வயோதிபர்கள் அவ் இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு
கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர். வயலூரில் எங்களின்
சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம்
கே.வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22)
நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன்
தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்வருமாறு
கூறினார். அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23 ம் திகதி
பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு
திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர
வயலூருக்கு போயிருந்தேன் அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு
தங்கியிருந்தேன் 24 ம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது
அவ்குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது நான்
விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன் நான் கைது செய்யப்பட்டாலும் பின்
விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல்
போயிருந்தது
இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன் ஆனால் குமரன் குளப்
பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன் சிறிது
நேரத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில்
சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு
இறந்து கிடந்தார்கள் ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர் ஒருவருக்கு
வாய்க்குள் துப்பாக்கி வைத்து வெடிவைக்கப்பட்டுள்ளது அவர் இறக்கவில்லை மற்றவரின்
பெயர் நடராஜா நான் இச் செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன் இதில் 40 க்கு
மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதை கனகசபை உறுதிப்படுத்தினார்.
வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை
வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008 ம்
ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டுவரமுடிந்தது
இருந்தபோதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் முதல்
சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள
பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம்
தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ஒரு கிராமத்தையே அழித்த
கறைபடியாத படுகொலையாகும்.
இக் கிராமம் காடுகளாகிவிட்டது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது
முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான
படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில்
தொடக்கம் நீலாவணைவரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று,
திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு,
கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராலும்
ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள்
என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியம் படுகொலை
செய்யப்பட்டதுடன் அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன
இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை
இதனால் தற்போதைய சமுதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை
மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள்
மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும்
என்பது தமிழ்களின் கடமையாகும்.
இருந்த போதும் தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில்
ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி
நிற்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்.
