Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் அமளி துமளி : முடிவு எதுவும் இல்லை..

தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் அமளி துமளி : முடிவு எதுவும் இல்லை..

0

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிவடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டத்தின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று  இறுதியில் அமளி துமளியில் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.  

கடும் சொல்லாடல்கள்…

ஜனாதிபதி தேர்தலில் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ரணில் விக்ரமசிங்க பெறுவார் என்று யாழ். மாவட்டத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஒருவர் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்ததுடன், இதனை எழுதித் தருவதாகவும் சபையில் வைத்து குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு,  பொது வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது,  மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை கடும் தொணியில் எச்சரித்ததுடன், அநாகரீகமான வார்த்தைகளால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ஒருவர் உட்பட பலர் வசை பாடியதாகவும் கூறப்படுகின்றது. 

அத்துடன், சிறீநேசனை  ஒருமையில் விமர்சித்ததாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணியின் நெருங்கிய சகாக்கள் உள்ளிட்ட சிலர் அவர் மீது ஏளனமான சொல்லாடல்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும், கூட்டத்தில் ்கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பு  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரனும் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தபோது, அவருடைய கருத்துக்களையும் ஏற்க மாட்டோம் என்று கூட்டத்தில் இருந்து சிலர் கூச்சலிட்டுள்ளனர். 

கூட்டம் நிறைவுபெறும் வரையிலும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி கடுமையாக கூச்சலிட்டதாகவும், சபையை குழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், கடும் கோபத்துடன் தன்னுடைய கருத்துக்களை அங்கு அவர் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது. 

அத்தோடு, பொதுவேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்துவது தொடர்பான கருத்து இருவரால் முன்வைக்கப்பட்டதாகவும், அந்தக் கருத்தை ஏற்க முடியாது என்றும் சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியில் கூட்டம் அமளி துமளியில் முடிவடைந்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பிக்கப்பட்ட இன்றைய தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இறுதி நிமிடத்தில் புஸ்வானமானது..

NO COMMENTS

Exit mobile version