Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியப் பேரவை யாருக்கு ஆதரவு : வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியப் பேரவை யாருக்கு ஆதரவு : வெளியானது அறிவிப்பு

0

தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான
ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக்
கட்சிகளுக்கு மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை (Tamil National Council) ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. 

அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதி முதல்வர், மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் எனவும் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை இன்று (26.05.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட முடிவுகள்

அந்த அறிக்கையில், ”நேற்று (25.05.2025) பிற்பகல் யாழ். கச்சேரிக்கு அருகாமையிலுள்ள
வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரிலும் அதன்
சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும்
கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக ஆசனங்கள் மூலம் கட்சியினால் நியமிக்கப்பட்ட
உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடி கொள்கை அடிப்படையில் ஒருமனதாக மேற்படி
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வெளிப்பாடு, சபைகளின்
ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதில் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்பவற்றைக்
கருத்திற்கொண்டு பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

இத்தீர்மானத்துக்கமைய தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்தால் (Gajendrakumar Ponnambalam) பின்வரும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடந்து முடிந்த தேர்தல்


அ.
மாநகர சபைகள் உட்பட தமிழர் தாயகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு
நடந்து முடிந்த தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்ற
சபைகளில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு தவிசாளர்
தெரிவில் ஆதரவு வழங்குவதுடன் அவ்வாறான சபைகளுக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த்
தேசியப் பேரவை போட்டியிடமாட்டாது.


ஆ.
அதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவை அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சபைகளில்
தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிடும். அதன்போது மக்கள் தேர்தலில் வழங்கிய
ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் ஆதரவு
வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறது.


இ.
பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டாவது
நிலையில் இருக்கும் சபைகளில் துணைத் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடும்.

சிங்கள பேரினவாத கட்சிகள்


ஈ.
பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில் இருக்கும்
தமிழ்த் தேசிய கட்சிக்கு துணைத் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவு வழங்கும்.


உ.
எந்தவொரு நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கும் அவற்றுக்கு
ஆதரவான கட்சிகளுக்கும் இவ்வாறான பதவிகளுக்கான தெரிவுகளுக்கு ஆதரவு
வழங்கப்படமாட்டாது.

இவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை தமிழ்த் தேசியக்
கட்சிகளின் கைகளில் வைத்திருப்பதுடன் எதிர்காலத்தில் எவ்வித
இடையூறுகளுமில்லாது மக்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று பேரவை
எதிர்பார்ப்பதுடன் இதன்மூலம் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க
முடியுமென்றும் தமிழ்த் தேசியப் பேரவை நம்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version