Home இலங்கை அரசியல் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழரசு கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழரசு கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

0

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam), இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இன்றையதினம்(25) வழங்கியுள்ளார்.

தமிழருடைய இனப்பிரச்சினை

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழருடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக, அரசாங்கத்திடம் வினாவுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த பிரதிநிதிகளாலும், ஜனாதிபதியாலும் தமிழருடைய இனப்பிரச்சினை விடயமானது, புதிய அரசியலமைப்பினூடாவே கையாளப்படும் என்ற கருத்தை உத்தியோக பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அந்தவகையில் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் மூன்று தமிழ் கட்சிகளுக்கும் வழங்கிய ஏகோபித்த ஆணையின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் சமஷ்டித் தீர்வை வலியுறுத்திய புதிய அரசியலமைப்புக்கான பொது யோசனையொன்றை முன்வைப்பதற்கும், அரசாங்கம் உத்தேசித்துள்ள ஏக்கிராஜ்ய அரசியலமைப்பை தமிழ்த் தரப்பாக ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் நிராகரிப்பதற்குமான முயற்சியில் தங்களுடைய கட்சியின் ஒத்துழைப்பும் மிக அவசியமானதாகும்.

அரசியல் தீர்வு

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தலைப்பட்சமாக தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதான பலத்தில் அரசாங்கம் உள்ள நிலையில், அரசியல் தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் உள்ள தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படவில்லையாயின், 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் தொடர்புடைய அறுதிப்பெரும்பான்மை நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

நாடாளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது.

இவற்றினடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு. கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். குறித்த கலந்துரையாடலில் தங்கள் கட்சியும் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

திட்டமிடப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் தொடர்பில் மாற்றங்கள் ஏதேனும் தேவைப்படின், மூன்று கட்சிகளுக்கும் பொருத்தமான வேறொரு திகதி மற்றும் நேரத்தினையும் கூட்டாக இணைந்து தீர்மானிக்க முடியும் என்பதையும் தங்களின் கவனத்துக்கு முன்வைக்கிறோம் என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version