தமிழ் மக்களின் அரசியல் இருக்கை என்பது இன்று ஆபத்தான நிலையில் உள்ளதுடன் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பிலே இப்போது இருக்கின்ற அரசியல் தலைவர்கள் எல்லோரும் உறங்கு நிலையில் இருக்கின்றார்கள் என ஐபிசி ஊடக குழுமம் மற்றும் றீச்ஷா குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Kandiah Baskaran) தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு தமிழருக்கு இருந்த ஒரு சொத்தாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்க்கின்றேன். ஆனால் அது ஒரு குறுகிய காலத்திலே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கப்பட்டுள்ளது.
தமிழருடைய போராட்ட வரலாறு
நான் நீண்ட நெடிய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத ஈடுபாட்டை கொண்டவன். அதற்கு காரணம், ஈழத் தமிழருடைய போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.
காசைக் கொடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக வேண்டிய தேவை எனக்குக் கிடையாது அதே சமயம் காசை வாங்கிக் கொண்டுதான் என்னை கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது.
ஒரு மகாநாடு நடத்துவதற்கு உதவி கோரினார்கள். உதவியின் அடிப்படையிலேயே பணத்தை வழங்கினேன். கட்சி அரசியலுக்குள் நுழைவதற்கான எந்தவிதமான ஆயத்தங்களும் இல்லை. அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக ஆசைப்படுகின்றேன்.
இப்போது இருக்கக்கூடிய கட்சிகள் மற்றும் கட்சிகளின் தலைமைகளை வைத்துக்கொண்டு எதிர்காலத்திற்கான அரசியலை இந்த மண்ணிலே படைக்க முடியாது என்பது ஆணித்தரமான கருத்து.
தலைவர்களின் வயதுகளைப் பார்த்தால் எழுபதைத் தாண்டி விட்டது. இவர்கள் எல்லோரும் அரசியலில் இருந்து ஒதுங்கி இளைய தலைமுறையினரை உள்ளே கொண்டுவந்து அவர்கள் ஊடாக ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர எத்தனிக்க வேண்டுதே தவிர திரும்பவும் நாங்கள் தான் அரசியலில் இருக்க வேண்டும் என எண்ணக் கூடாது.
ஒரு அரசியல் தலைவர் மூன்று ஆண்டுகளாக உறங்கு நிலையில் இருந்தார். இப்போது மூன்று மாதமாக விடுமுறை எடுத்திருக்கின்றார். இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொடுப்பார்கள்.
மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது. பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது.
ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி கிரியை செய்வதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டு விடயங்களும் சமகாலத்திலேயே எங்கள் கண்முன்னே நடந்துகொண்டிருக்கின்றது.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
https://www.youtube.com/embed/joCjGaiTAP0