இலங்கையில் இருந்து ரஷ்ய இராணுவத்திற்கு 3 தமிழ் இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (06.12.2024) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் நாட்டிற்கு மீட்டெடுக்குமாறு சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடளுமன்றத்தில் எல்லோரும் சமம்
உடனே இதற்கு விளக்கமளித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஆராய்வார் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இது தொடர்பான கேள்வி வடக்கில் மட்டுமல்லாது நாடு முழுவதும் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட காலமாக விவாதத்திற்கு உட்படும் இதுபோன்ற கருத்துக்கள் கடந்த அரசாங்கத்திலும் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, மீண்டும் குறுக்கிட்ட பிமல் ரத்னாயக்க, இந்த பிரச்சினைக்கான தீர்வு காணும் பொறுப்பை நாம் வெளிவிவகார அமைச்சரிடம் ஒப்படைத்ததாகவும் மீண்டும் இதனை ஒரு விவாதமாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நாடளுமன்றத்தில் எல்லோரும் சமம் எனவும் யாரும் பெரியவர் அல்ல எனவும் கூறிய அவர், தன்னை பெரியவர் என்று எவரேனும் நினைத்தால் அவர் சபைக்கு தகுந்தாற் போல் தம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.