Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களை ஏமாற்றிவிட்டது அரசு! பாடம் புகட்ட சஜித் அழைப்பு

அரச ஊழியர்களை ஏமாற்றிவிட்டது அரசு! பாடம் புகட்ட சஜித் அழைப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் ஆணையைப்
பெற்றுத் தந்த அரச ஊழியர்கள், அரசாலேயே தற்போது கைவிடப்பட்டுள்ளனர் என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உள்ளூராட்சி
மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்பின் போதே
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

மறுசீரமைப்பு 

அவர் மேலும் தெரிவிக்கையில்,”மின்சாரத் துறையை மறுசீரமைப்புச் செய்வதாகக் கூறி, இன்று 23 ஆயிரம் ஊழியர்களை
ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

மின்சாரத் துறையில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம்
மற்றும் விநியோகத் துறைகளில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு,
புதிய போட்டித் தன்மை வாய்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்வது அவசியம்.

எனினும், இந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பையும் சமூகப்
பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

தற்போதைய அரசை ஆட்சிக்குக் கொண்டு
வருவதற்கு உதவிய மின்சார சபை ஊழியர்களை இந்த அரசு ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசு ஆபத்தில்

மின்சார சபை ஊழியர்களை வீதிக்குக் கொண்டு வந்து, முந்தைய அரசுகளை
அசௌகரியங்களுக்கு ஆளாக்கி, அரச ஊழியர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய
அரசு, இன்று மின்சாரத் துறையில் பணிபுரியும் 23 ஆயிரம் அரச ஊழியர்களை
மறந்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மின்சாரத் துறையில் பணி புரியும் ஊழியர்கள் இப்போது தாமாக முன்வந்து
ஓய்வுபெறலாம் என்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய கடுவலை நகர சபை தவிசாளர் அப்போது மின்சார சபையின் தொழிற்சங்கத்
தலைவராக செயற்பட்டார்.

மின்சாரத்துறையில் உள்ள ஊழியர்களைத் தவறாக வழிநடத்தி,
வீதிக்கு இறங்க வழிவகுத்து, அதன் விளைவாக, கடுவலை தவிசாளரான அவர், தவிசாளர்
பதவிக்கு வந்ததன் பிற்பாடு அவரும் மின்சார சபை ஊழியர்களை மறந்து விட்டு,
அவர்களை ஆபத்தில் சிக்க வைத்துள்ளார்.

எனவே, மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய இந்த அரசுக்கு எதிர்வரும் மாகாண
சபைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்குமாறு நான் சகலரையும்
கேட்டுக்கொள்கின்றேன்.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version