எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் கால பிரசாரக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன என ரணிலின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை என்றும், ரணிலுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று(14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த தேர்தல்
இது தொடர்பில் மேலும் தெரித்த அவர், “கடந்த தேர்தல் காலங்களின்போது எவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சஜித் பிரேமதாஸ எங்களிடம் கேட்டுள்ளார்.
ஏதேனும் பிரதேசம் ஒன்றுக்குச் செல்லும்போது அவர் உதவி கோருவார்.
நானும் அதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளேன்.
இதற்கான வட்ஸ்அப் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இல்லையென மறுக்க முடியாது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
இவ்வாறிருக்க அவரது அண்மைய யாழ்ப்பாணம் விஜயத்தின்போது சஜித்தின் கருத்துக்கள் உண்மையாகவே கவலையளிக்கின்றன.
ரணிலுக்கு ஆதரவு
அவர் அவசர அவசரமாக அதிபராக நினைத்தால் கோட்டாபாய வெளியேறிய காலத்துக்கு முன்னதாகவே வெளியேற நேரிடும்.
எனவே, எதிர்வரும் அதிபர் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்துப் பயனில்லை. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்குஆதரவளிப்பதே சிறந்தது.”என்றார்.