வவுனியாவில் வெற்றிகரமாக இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்து விட்டது.இதில் கட்சியில் இருந்து விலக்குபவர்களை எல்லாம் விலக்கி விளக்கம் கேட்பவர்களை இடைநிறுத்தி ஏதோ போரில் வெற்றிபெற்ற பெரும் புன்னகையுடன் மத்தியகுழு உறுப்பினர்கள் வெளியில் வந்துள்ளனர்.
இதில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்வி என்னவென்றால் 75 வயதுடை பாரம்பரியமிக்க அரசியல் கட்சி ஒன்று அனைவரையும் ஒன்று சேர்த்து பயணிப்பதற்கு பதிலாக ஏன் எல்லோரையும் வெட்டி விடுகிறது என்பதுதான்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனியாக போட்டியிட்டவர்களை விலத்தினோம், விளக்கம் கேட்டோம் என்கிறார்கள்.அப்டியென்றால் கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் பெருந்தொகை எனில் கட்சிக்குள் ஏதோ பிழை நடக்கிறது என்றுதானே அர்த்தம்.அப்படியென்றால் கட்சி தனது பிழையை கண்டல்லவா அதனை சீர்திருத்தவேண்டும்.இதைவிடுத்து உறுப்பினர்களை விலத்துவதால் என்ன இலாபம் வரப்போகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரியநேத்திரன் பொதுவேட்பாளராக அதுவும் தமிழர்களின் பொதுவேட்பாளராகவே களமிறங்கினார்.அவர் ஜனாதிபதி தேர்தலில் வெல்லமாட்டார் என தெரிந்தும் தமிழர்களை ஒன்றுதிரட்டி தமிழரின் ஒற்றுமையை சர்வதேசம் முன் பறை சாற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது.மிக குறுகிய காலத்தில் பாரிய பிரசாரங்கள் இன்றி அவர் போட்டியிட்டபோதும் அதில் வெற்றியும் கண்டார்.
ஆனால் ரணில் மைத்திரி நல்லாட்சியில் ஐந்துவருடம் தேனிலவு கண்ட தமிழரசுக்கட்சி தமிழர் விடயத்தில் எதனையும் சாதிக்காமல் மீண்டும் தென்னிலங்கை வேட்பாளரான சஜித்திற்கு தனது ஆதரவை வழங்கியது.இந்த ஆதரவு தொடர்பில் தமிழ் மக்களுக்கு உரிய காரணம் எதுவும் கூறப்படவில்லை.கேட்டால் அது இராஜதந்திரம் என்ற கதைவேறு.
சரி பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது எந்த நடவடிக்கையை கட்சி எடுத்தது.
தமிழர்களை ஒன்றுபடுத்த முன்னின்ற அரியநேத்திரன் துரோகி. தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தவர்கள் தியாகிகள்.அப்படித்தானே அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.
இது வேறொன்றுமில்லை தனிநபருடைய கட்டுப்பாட்டில் கட்சி இன்று ஊசலாடுகிறது. இதற்கு அந்த கட்சியில் உள்ள வயதானவர்களும் ஒதது ஊதுகிறார்கள்.
இப்டியே கட்சி அங்கத்தவர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தால் எஞ்சியிருப்பவர்கள் சொம்பு தூக்கிகளாகத்தான் இருப்பார்கள்.
தேர்தல் முடிவுகளை அடுத்து அனைவரையும் இணைத்து ஒருமித்து பயணிப்பதை விடுத்து கருவறுக்கும் செயலில் இறங்கிவிட்டது கட்சி.
இனி என்ன தந்தை செல்வாவின் கருத்துப்படி பாவம் தமிழர்கள்…