Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை

0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான செயற்பாடுகளை
முன்னெடுப்பதற்காக தமிழ் தேசியப் பேரவை என்னும் அமைப்பு உதயமாகியுள்ளதாக
அரசியல் ஆய்வாளரும், தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினருமான நிலாந்தன்
தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நேற்று (29.06.2024)
வவுனியாலில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் தேசியக்
கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடலின்
பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல்

இது தொடர்பில் அவர் மேலும்
தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளும், மக்கள் அமைப்பாகிய தமிழ்
மக்கள் பொதுச் சபையும் இணைந்து கலந்துரையாடி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

அந்த உடன்பாட்டின் அடிப்படையில் கட்சிகளும், மக்கள் பொதுச் சபையும் இணைந்து
ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த பொதுக் கட்டமைப்பு தமிழ் தேசிய
பேரவை என அழைக்கப்படும்.

தமிழ் தேசியப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 6 ஆம்
திகதி இடம்பெறும். இக் கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக புரிந்துணர்வு
உடன்படிக்கை கட்சிகளுக்கும், மக்கள் அமைப்புக்கும் இடையில்
கைச்சாத்திடப்படும்.

அதன் பின் தேவையான உப குழுக்களை உருவாக்கி ஜனாதிபதித்
தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் செயல்
பூர்வமாக முன்னெடுக்கப்படும்.

தமிழ் தேசியப் பேரவை என்னும் பொது கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த பொதுக் கட்டமைப்பு உப கட்டமைப்புக்களை உருவாக்கும். அதில் ஒன்று யார்
தமிழ் பொது வேட்பாளர் என்பதை கண்டு பிடிக்கும். இன்னுமொரு உப கட்டமைப்பு
தேர்தல் அறிக்கை என்ன என்பரைத இறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையான கட்சிகள் 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து
தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில்
அமைப்புக்களும் ஒன்று கூடி தங்களை ஒரு அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

தற்போது இரு தரப்பும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக தமிழ் தேசிய பேரவையாக செயற்பட
இணங்கியுள்ளன. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு சார்ந்து தமிழ்
பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக தீர்மானித்துள்ளோம்.

அதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தேவையான
குழுக்கள் நிறுவப்படும். அந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு பொது வேட்பாளர்
விடயம் கையாளப்படும்.

அந்த வகையில் இது ஒரு முக்கியமான கூட்டம். தமிழ் தேசியப்
பரப்பில் பெரும்பான்மையான கட்சிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

பொதுகட்டமைப்பான தமிழ் தேசிய பேரவை தான் இனி பொது வேட்பாளரை தெரிவு செய்யும்.

தேர்தல் பிரசாரத்தையும் அதுவே முன்னெடுக்கும். தமிழ் தேசியப் பேரவையின்
உறுப்பினர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவர். இது அரசியல்
மயப்படுத்தப்பட்ட விடயம் தான். எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பின் உத்தியோக
பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
(புளொட்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி, தமிழ் தேசியக் கட்சி, ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்), தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக
போராளிகள் கட்சி என்பன அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version