மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு
அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நேற்று(12.09.2025) வெகுவிமர்சையாக
நடைபெற்றுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
பத்து தினங்கள் நடைபெற்றுவந்த ஆலயத்தின் மகோற்சவத்தில் தினமும் தம்ப
பூஜை, வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தீர்த்த கங்கை
ஆலயத்தில் நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தீர்த்த திருவிழாவுக்கான
விசேடமான திருப்பொற்சுண்ணம் இடித்தபின், பாலமுருகப் பெருமான், பால விநாயகர்,
சிவன், பார்வதி ஆகிய திருவுருவங்கள் எழுந்தருளி, பக்திப் பரவசத்துடன்
தீர்த்தோற்சவத்திற்காகப் புறப்பட்டன.
ஆலயத்தின் புனித தீர்த்த கங்கை என அழைக்கப்படும் சரவணப் பொய்கையில்
தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, வேல் ஏந்தி தீர்த்தம் ஆடிய சிவாச்சாரியார், திடீரென பரவச நிலையில்
ஆழ்ந்து மூர்ச்சையாகி விழுந்தார். இந்த அற்புதக் காட்சி, நிகழ்வில் பங்கேற்ற
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த மஹோற்சவத்தின் போது, அடியார்கள் பலர் கற்பூரச் சட்டி மற்றும் காவடிகள்
எடுத்து நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.
தீர்த்தோற்சவத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
