நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இராதாகிருஷ்ணன் அரசியலுக்கு
வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள்
அறிவார்கள். எனவே எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள்
சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் தொடர்ந்து பேசுகையில்,
“நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். நுவரெலியா
மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக எத்தனையோ சுயேட்சைக்
குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.
மக்கள் சேவை
அதேபோல் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்
எல்லாம் அரசியல் கட்சிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில்
இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்தவர்கள் யார், அவர்களுக்கு பிரச்சினைகள்
ஏற்பட்ட போது உடனிருந்து உதவியவர்கள் யார், எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவப்
போவது யார் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கமும் மக்கள்
முன்னணியும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க
முடியாது. அதற்கான பிரசார நடவடிக்கைகளை நாம் கொண்டு வருவதோடு முறையாக சேவை
செய்த எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் கடந்த காலங்களில் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வந்து அதில் வெற்றி கண்டுள்ளோம். இந்த தேர்தலிலும் நிச்சயமாக
வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வோம்.
மக்களிடம் கோரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் 2015, 2020 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்
முற்போக்கு கூட்டணி மூன்று உறுப்பினர்களைப் பெற்றிருந்தது போல கொழும்பு, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நாம் உறுப்பினர்களைப் பெற்றிருந்தோம்.
நாடாளுமன்றத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.
இந்தத்
தேர்தலிலும் அந்த எண்ணிக்கை குறையாது.
தேர்தலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் என பலர்
போட்டியிடலாம். அவர்கள் அவரவர் தொழிலில் பாண்டித்தியம் பெற்றவர்களாக
இருக்கலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனுபவம் இருக்காது.
2919ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த நிர்வாகி என மக்கள் வாக்களித்து கோட்டாபயவை
வெற்றி பெறச் செய்திருந்தார்கள். அவருடைய திறமை எவ்வாறு அமைந்தது, நாடு எந்த
அளவுக்கு வளர்ச்சி கண்டது, வங்குரோத்து நிலையை அடைந்தது என்பதை மக்கள்
அறிவார்கள்.
எனவே, இந்த தேர்தலில் உங்களுக்கு அறிமுகமான,
நன்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு
அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் உண்மையான சேவைகளை பெற்றுக் கொள்ள
முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.