ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) எந்த பதவியையும் வகிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (06) அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்.
எரிவாயு சிலிண்டர் சின்னம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாம் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம்.
அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கூட்டணியில் போட்டியிடவுள்ளோம். விரைவில் எமது கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்யும்.
நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
பொதுத் தேர்தலின் பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியை மேலும் பலப்படுத்தி உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம்“ என தெரிவித்தார்.