தாய்லாந்திலிருந்து(thailand) வருகை தந்த இலங்கையைச்(sri lanka) சேர்ந்த மூன்று பெண்கள் திங்கட்கிழமை (19) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தாயும் அவரது 18 வயதுடைய மகளும், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த மின்சார சாதனங்களில் மறைத்து வைத்து ரூ.120 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
பண்டாரநாயக்க வருகை முனையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.இதன்போது வீட்டு மின் பொருட்களுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.
இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட குஷ் போதைப்பொருள் 12 கிலோ எனவும் இலங்கையில் ஒரு கிராம் குஷ் விலை ரூ.10,000 எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாதுகாப்பு கமராவில் வெளிவந்த உண்மை
குறித்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மின் உபகரணங்கள் கொண்டு வந்திருப்பது கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
