இலங்கையில் (Sri Lanka) தமிழருடைய தேசத்தையும், அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள இந்தியா (India) ஒத்துழைக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People’s Front) வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்றையதினம் (20) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் (S. Kajendran) சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பிரித்தானிய (Britain) காலணித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டதன் பின்னரான 75 வருட காலத்தில், சிறிலங்கா அரசானது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் எதிர்காலம்
கடந்த 75 வருடங்களாக இலங்கை கடைப்பிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய இந்த வங்குரோத்து நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
எனவே, இந்நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், இந்த நாட்டின் கொள்கைகளிலும் ஒரு உண்மையான தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகின்றது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் ‘ஒற்றையாட்சி’ அரசியல் அமைப்பாகும். குறிப்பாக 36 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது.
அதேவேளையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 13 ஆவது திருத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறையில் உள்ளபோதும்கூட தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.