இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை 1983 படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நகர முனியப்பர் கோவிலடியில் இன்று (23.07.2025) மாலை 5 மணியளவில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கறுப்பு ஜூலை
கறுப்பு ஜூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) உறுப்பினர்களால் திட்டமிடப்பட்ட போதிலும், அதன் பின்னர் கணிசமான சிங்கள பொதுமக்களின் பங்கேற்புடன் 1983 ஜூலை 23 இரவு, தலைநகர் கொழும்பில் (Colombo) தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
அந்தகவகையில், 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா (Sri Lanka) அரசு, சிறிலங்கா சிங்கள பாதுகாப்பு படையினர், இனவெறி கொண்ட காடையர்கள் மற்றும் பொதுமக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான கறுப்பு ஜூலை சம்பவம் இன்னமும் தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாகவே இருக்கிறது.
