Home முக்கியச் செய்திகள் வடக்கு – கிழக்கில் கன மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வடக்கு – கிழக்கில் கன மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

0

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (10.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த மழைவீழ்ச்சி

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

குறைந்த அழுத்தப் பிரதேசம்

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இணைந்ததாக நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-weather-in-sri-lanka-heavy-rain-with-thunder-1733794611?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version