Home இலங்கை சமூகம் இலங்கைக்கான வாகன இறக்குமதியில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

0

இலங்கையில் வாகன இறக்குமதியின் போது இடம்பெறும் பாரிய வரி ஏய்ப்பு மற்றும் தரவு மோசடிகளைத் தடுப்பதற்காக, சுங்கத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஆகியவற்றுக்கிடையே புதிய டிஜிட்டல் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சுங்கத் திணைக்களத்தின் ‘ASYCUDA World’ மென்பொருள் மூலம் வாகனத்தின் இயந்திர இலக்கம், உற்பத்தி ஆண்டு மற்றும் செலுத்தப்பட்ட வரி விபரங்கள் நேரடியாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும்.

இரு திணைக்களங்களுக்கும் இடையே முறையான கணினி இணைப்பு இல்லாததால், வாகனத்தின் உற்பத்தி ஆண்டு, இயந்திரத் திறன் மற்றும் உற்பத்தி நாடு போன்ற தரவுகள் மாற்றப்பட்டு மோசடிகள் இடம்பெற்றிருப்பது கோபா நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சமர்ப்பித்த அறிக்கை

இந்தநிலையில் குறித்த நேரடித் தரவுப் பரிமாற்றத்தின் மூலம் வாகனங்களின் இயந்திரத் திறனைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்புச் செய்வது மற்றும் உற்பத்தி ஆண்டை மாற்றிப் பதிவு செய்வது போன்ற மோசடிகள் இனி சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு முன்னதாக, சுங்கத் தரவுகளை நிகழ்நேரத்தில் சரிபார்க்கும் அதிகாரம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நவம்பர் 6 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, சுங்கம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், உள்நாட்டு இறைவரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகிய 4 நிறுவனங்களும் எதிர்காலத்தில் ஒரே டிஜிட்டல் வலையமைப்பில் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version