ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக,
எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடன் ஒரே நோக்கத்துடனும், நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கிச்
செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் நேற்றைய தினம்(21/12/2025) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீள் உருவாக்க நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும்,
மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும்
பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும்
முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும்
கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும்.
நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும்,
கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது. இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள
பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும்
ஒரு நாடாக மாற்றுவதாகும். ஓர் அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் எனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை,
நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன்.
இதன்படி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான
பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும்,
அரசியலை – செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை
செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் கவனத்துடன் செயற்பட்டு வருகிறது.
இலங்கை இராணுவத்தின் முக்கிய பங்கு
சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக
பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள
வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக
அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும்
பங்காற்றியுள்ளது.
நீங்கள்
மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள். அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு
உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது,
நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல
தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது.
நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோல்வி கண்ட ஒரு சகாப்தம்
இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது.
மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது.
நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து
கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று
பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு
எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது.
மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
ஜனாதிபதியாகவும்
அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும்
தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும்,
அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு
சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான
உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயற்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக
முன்னேற முடியும்.
ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக்
கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி
அளிக்கின்றேன்.
மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை
முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். உங்களுக்கு
வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான்
அழைக்கின்றேன்.
நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து
பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன்
தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார்
வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் விமானப்படைத்
தளபதி எயார் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
