Home இலங்கை சமூகம் நாட்டின் எதிர்காலத்திற்காக உண்மையைச் சொல்ல வேண்டும் : ஜனாதிபதி

நாட்டின் எதிர்காலத்திற்காக உண்மையைச் சொல்ல வேண்டும் : ஜனாதிபதி

0

நாட்டின் நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களிடமிருந்து நாட்டுக்கு நன்மையை
எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடு அராஜகமாக இருந்த போது தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால்,
இன்று நாட்டின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாது எனவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று முன்தினம் (22.06.2024) மாலை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர்
கூடத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்
பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

பொது அமைப்புகள்

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மட்டக்களப்பில்
அரசியல் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்த பலரைச் சந்திக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது.

இன்று நாடு மிகவும் கடினமான நிலையில் உள்ளது. கடந்த
ஆட்சியின் போது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு,
குறைந்தபட்சம் மூன்று பில்லியன் டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்
என்பதை கூறியிருந்தேன்.

அன்று எந்த அரசியல் கட்சியும் அந்த உண்மையை சொல்லவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி
உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியினர் இது பற்றி என்ன சொன்னார்கள்?.
நாங்கள் மட்டுமே நாட்டுக்கு உண்மையைக் கூறியதால், நாங்கள் பொய்ப் பிரசாரம்
செய்கிறோம் என்று மக்கள் நினைத்தனர்.

அரசியல் நிலைப்பாடு எவ்வாறானதாக
இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக
உண்மையைப் பேச வேண்டும். அரசியலில் நாம் எப்போதும் உண்மையையே பேச வேண்டியது
கட்டாயமாகும்.

ஆட்சி அதிகாரம்

நாட்டில் போராட்டம் வலுவடைந்திருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய
ராஜபக்ச , சஜித் பிரேமதாசவிடம் இந்த நாட்டைக் கைப்பற்றுமாறு கோரினார்.

நாட்டின்
எதிர்காலத்தைப் பொறுப்பேற்க அவர்கள் முன்வரவில்லை. இப்போது நாட்டின் ஆட்சி
அதிகாரத்தை கோரும் மக்கள் விடுதலை முன்னணி அந்த கோரிக்கையைப் பொருட்படுத்தவே
இல்லை.

இவ்வாறானவர்களை நாட்டின் தலைவர்களாக்க வேண்டுமா?

எனினும், சவால்களை கண்டு அஞ்சாமல் அதற்கு ஈடுகொடுத்து அரசாங்கத்தையும்
அமைத்தோம். தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது.

சவால்களுக்கு மத்தியில் நாட்டை ஏற்றுக்கொண்ட என்னையும் பதவி விலகுமாறு,
வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version